7

ஹெலன் கெல்லரின் இருண்ட வாழ்க்கைக்கு கல்வி ஒளியை ஏற்றியவர். ஹெலனை உலகில் உச்சத்துக்குக் கொண்டு சென்ற ஆசிரியர். ஒரு ஆசிரியர் தனி கவனத்துடன் திறமையாக செயல்பட்டால் ஒருவரை உலகளவில் உயர்த்த முடியும் என்பதற்கு ஆனி சல்லிவன் (Anne Sullivan) ஒரு உதாரணமாகும். இவர் கெல்லருடன் 49 ஆண்டுகள் ஒன்றாகவே இருந்து தன் வாழ்வை அர்ப்பணித்தார்.

ஆனி சல்லிவன் ஒரு ஐரிஸ் – அமெரிக்கன் ஆசிரியை. ஒரு சிறந்த ஆசிரியை எனப் பெயர் பெற்றவர். ஏப்ரல் 14, 1866 இல் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்தார். இவர் தனது 5ஆவது வயதில் பார்வையை இழந்தார். பின்னர் தனது கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதன் பலனாக ஓரளவு பார்வை கிடைத்தது. 1886இல் பெர்கின்ஸ் பள்ளியில் பட்டம் பெற்றார். பிறகு இந்தப் பள்ளியின் ஆசிரியராகச் சேர்ந்தார். இவருக்கு 20 வயது இருக்கும் போது ஹெலன் கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் மார்ச் 3, 1887இல் ஹெலன் கெல்லரின் வீட்டிற்கு ஆசிரியராகச் சென்றார். அது கெல்லரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பொன்னாள். அன்று முதல் அக்டோபர் 20, 1936 வரை ஹெலனுடனே இருந்தார். ஆம் அவர் இறக்கும் வரை கெல்லரின் ஆசானாகவே வாழ்ந்து மறைந்தார்.

ஆனி சல்லிவனின் தந்தை ஒரு மிகப் பெரிய குடிகாரர். இவரது தாயார் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டார். ஆகவே இவரின், இளமைப் பருவம் வறுமையும், துயரமும் நிறைந்ததாகவே இருந்தது. இவரின் 5 ஆவது வயதில் டிரக்கோமா நோயால் பாதிக்கப்பட்டார். பெற்றோர்கள் முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.

ஆனி சல்லிவனுக்கு 7 வயது இருக்கும் போது தாய் இறந்து போனார். தந்தை குடிகாரன் ஆனதால் கவனிப்பாரற்று, 5 வயது சகோதரனுடன் ஆதரவற்றோர் விடுதி ஒன்றில் சேர்ந்தனர். ஏற்கனவே நோய் வாய்ப்பட்டிருந்த சகோதரனும் இறந்து விட்டதால் ஆனிக்கு என்று ஆதரவாக யாரும் இல்லை. சொல்லப்போனால் ஒரு அனாதை என்கிற நிலைதான்.

ஆனி சல்லிவன் பெர்கின்ஸ் என்னும் பார்வையற்றோர் பள்ளியில் படித்தார். இந்தப் பள்ளியில் தனது 14ஆவது வயதில் தான் சேர்ந்தார். இவருக்குப் பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தன. அதன் உதவியால் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும் குறைந்தளவே பார்வை கிடைத்தது. இவர் சைகை மொழியில் சிறந்த வல்லுநர் ஆனார். பார்வையற்றக் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அளவிற்கு திறமை கொண்டவராக ஆனி விளங்கினார்.